ஏராளமான ரசிகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், ஒரு கட்டத்தில் மேடையை நோக்கி ரசிகர்கள் திடீரென முண்டியடித்துக்கொண்டு சென்றதால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினார்கள்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் தொடங்கி, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத்தின் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. சேலம் 3 ரோடு ஜவகர் மில் திடலில் நடந்த இந்த விழாவுக்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கி பேசினார்.
இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள், அரசு மருத்துவமனைக்கு சக்கரநாற்காலிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
போலீஸ் தடியடி
நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி மேடையை நோக்கி முண்டியடித்துக்கொண்டு வர ஆரம்பித்தது. அதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது.
அதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மேடையை நோக்கி வந்த ரசிகர்கள் கூட்டத்தின் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். மேலும் கூட்டத்தின் நடுவே இருந்த சில ரசிகர்கள் விஜய்யை நெருக்கமாக சென்று பார்க்க முடியாத ஆத்திரத்தில் தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலைக்கு மேல் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment