Friday, June 14, 2013

நலத்திட்ட விழா ரத்தானதற்கு காரணம் யார்? மௌனம் கலைத்தார் விஜய்

Why Did My Function Get Cancelled Explains Vijay தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை.

என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று.

இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார்.

No comments:

Post a Comment