Saturday, August 10, 2013

தலைவா படத்துக்கு தடங்கலா? தமிழகத்தில் என்ன நடக்கிறது?: கருணாநிதி

தலைவா படத்துக்கு தடங்கலா? தமிழகத்தில் என்ன நடக்கிறது?: கருணாநிதிதலைவா திரைப்படம் வெளியிடுவதில் தொடரும் தடங்கலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அரசியல் வாதிகள் மேடைகளில் முதலமைச்சரைப் பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது. பத்திரிகைகள் அந்தப் பேச்சினை வெளியிட்டால் அவர்கள் மீதும் அவதுhறு வழக்கு. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கே பொதுக் கூட்டமோ, நிகழ்ச்சிகளோ நடத்த முடியவில்லை. 

ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்திலே கூட இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. அந்த வரிசையிலே தான் "தலைவா" திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள். 

இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடிகர் விஜய், அந்தப் படம் அரசியல் படம் அல்ல என்றும், யாரோ சிலர் பரப்பி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

அவ்வளவிற்கும் அந்தப் படத்திலே நடித்துள்ள விஜயின் தந்தை இயக்குனர், எஸ்.ஏ. சந்திரசேகர், இந்த ஆட்சிக்கு மிகவும் வேண்டியவர் என்று கருதப்படுகிறவர். அரசுக்கு ஆதரவாக பல முறை நடந்து கொண்டவர். ஆனால் அவரும், நடிகர் விஜயும் முதலமைச்சரை இதற்காகச் சந்திப்பதற்காக கொடைநாட்டிற்கே பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் முதல்வரைப் பார்க்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் செய்தி வந்துள்ளது. 

மேலும், தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வழக்கமாக தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் "வரி விலக்கு" கூட, இந்தத் திரைப்படத்திற்கு மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கும் இந்த நிலை தான் வந்தது. தமிழகத்தில் இப்படிப்பட்ட ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் புறம்பான நிலைமைகள் தொடருமேயானால், அதை யாரும் கண்டுகொள்ளாமல் நமக்கென்ன என்று இருந்து விடுவார்களானால், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கத் தொடங்குகின்ற நிலை தான் ஏற்படும்.

 ஜனநாயகம் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு, தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment