Tuesday, August 27, 2013

'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்

விஜய் நடித்த தலைவா படத்தின் கதை கற்பனையானது. எந்த நிஜ மனிதர்களையும் குறிப்பிட்டு அந்தப் படம் எடுக்கவில்லை. எனவே படத்துக்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று இயக்குநர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், "தலைவா' படம் மும்பையில் வாழ்ந்த தனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை பற்றியது. தனது தாத்தாவும், தந்தையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். அதனால் அந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர், இயக்குநர் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்
"தலைவா' படத்தை தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தவர் குறிப்பிட்டபடி, அந்தப் படம் யாரையும் மையப்படுத்தி எடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தின் கதாபாத்திரங்கள் உள்பட அனைத்தும் கற்பனைக் கதைதான். 

படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் எந்த தொழிலும் செய்வதாக காட்டப்படவில்லை. மேலும், அவர் எந்த சங்கத்துக்கும் தலைவராக இருக்கவில்லை. அவர் அங்குள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்வதாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்
இது தவிர, அந்த கதாபாத்திரம் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மகாராஷ்டிரம், பிகார், தமிழகம் மற்றும் இதர மாநில மக்களுக்காக அவர் உதவுவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. 

மனுதாரர் குறிப்பிட்டபடி மும்பை தாராவி பகுதியில் எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. மும்பை கடற்கரை ஓரங்களில்தான் நடத்தப்பட்டது. மனுதாரரின் மனுவில் கூறியவாறு படத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. அதனால் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என இயக்குநர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

வழக்கை விசாரித்த இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

No comments:

Post a Comment