Thursday, August 8, 2013

‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்

தலைவா' படத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் சென்னை பெரு நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: 

மும்பை தாராவியில் வசிக்கும் தமிழர்களின் மத்தியில் பிரபலமானவர் எஸ்.எஸ்.கே. என்று அழைக்கப்படும் எஸ்.எஸ்.கந்தசாமி சேட். அவர் சீதபற்பநல்லூர் கிராமத்தில் இருந்து சுதந்திரத்துக்கு முன்பதாகவே சிறு வயதில் தாராவிக்கு சென்றுவிட்டார்.‘தலைவா’ படத்துக்கு தடை கேட்டு மேலும் ஒரு வழக்கு - தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ்
அங்கு அவர் தோல் பதனிடும் தொழிலை செய்து வந்தார். அதோடு அங்கிருந்த ஏழை- எளிய தமிழர்களுக்கு சமுதாய மற்றும் மத ரீதியான சேவைகளை செய்து வந்தார். 

எனவே தென் இந்திய ஆதிதிராவிட மாகஜன் சங் என்ற அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்து வந்தார். 

எஸ்.எஸ்.கே.க்கு எஸ்.கே.ராமசாமி, எஸ்.கே.பன்னீர்செல்வம், எஸ்.கே.அழகர்சாமி ஆகிய 3 மகன்களும், மல்லிகா என்ற ஒரு மகளும் உண்டு. அவர்களில் பன்னீர்செல்வம் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டார். அழகர்சாமி மர்மமான முறையில் இறந்தார்.

எஸ்.கே.ராமசாமி பல்வேறு சமுதாய சேவைகளைச் செய்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அங்குள்ள மக்களுக்காக கோவில்களை கட்டியுள்ளார். ஏழை மக்களுக்காக பள்ளிக்கூடம் கட்டியுள்ளார். மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். 

தாராவியில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரான சீதபற்பநல்லூர் மக்களுக்கும் பல்வேறு நன்மைகளை எஸ்.கே.ராமசாமி செய்துள்ளார். 15.2.87 அன்று அவர் மரணமடைந்தார். அவர் செய்த சமுதாயத் தொண்டுகளுக்காக அவரை தாராவித் தலைவன் என்று மக்கள் அழைத்தனர். 

எஸ்.கே.ராமசாமியின் மகன்தான் நான். இந்த நிலையில் பத்திரிகை செய்தியை படித்தபோது, 

எனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை வரலாறைத்தான் ‘தலைவா' என்ற படத்தில் கதையாக வைத்திருப்பதாக தெரிய வந்தது. அதில், எனது தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜும், எனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடிகர் விஜயும் நடித்துள்ளனர். 

எனது தாத்தா மற்றும் தந்தை அணியும் வெள்ளை உடைபோல, தலைவா படத்தில் இவர்களும் உடை அணிந்து நடித்துள்ளனர். ஆனால் தந்தை சத்யராஜை கொலை செய்தவர்களை மகன் விஜய் தேடி கண்டுபிடித்து கொலை செய்வதுபோல் தலைவா கதை அமைக்கப்பட்டுள்ளது. எனது தந்தை அப்படியெல்லாம் யாரையும் கொலை செய்யவில்லை. எனது தாத்தாவும், தந்தையும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதுபோலவும், தாதா போலவும் ‘தலைவா' படத்தில் காட்டப்படுகிறது. இந்த படம் 9-ந் தேதி வெளியிடப்படுவதாகத் தெரிகிறது. ‘தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

 எனவே இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், வெளியீட்டாளர் மதன், இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோருக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

நோட்டீஸ்

 இந்த மனுவை சென்னை இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு தயாரிப்பாளர், இயக்குனர், வெளியீட்டாளர் 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment