Monday, May 2, 2011

இந்த வருடம் யாரு தோக்குறா? யாரு ஜெய்கிறா?

தமிழ் சினிமாவில் கதாநாயக ஆராதனை என்பது இன்று துவங்கியதல்ல. வளர்ந்து கொண்டே இருக்கிற விஷயம். சமீபத்திய வாசகம் ஒன்று…

ஹீரோக்கள் கடவுளாவதால்
அவசர அவசரமாய்
கடவுள் திட்டம் போட்டார்
கோடம்பாக்கத்தில் அவதரிக்க…


நான் யார் ரசிகர் தெரியுமா? என்பதை படித்து வாங்கியப் பட்டம் போல் சொல்லிக் கொள்கிறார்கள் ரசிகர்கள். ரஜினி, கமல் தாண்டி அடுத்த ஹீரோக்களிடமும் வளரத்தான் செய்தது இது. ஒரு பெரிய ஹீரோ படம் ரிலீஸ் ஆகும்போது பாலபிஷேகம் இல்லை என்றால் அந்த ஹீரோவை விட அவர் ரசிகர்களுக்குத் தான் கௌரவ பிரச்சனை.



சென்ற ஆண்டு விஜய், அஜீத், விக்ரம் என முக்கிய ஹீரோக்கள் அப்செட். சூர்யாவுக்கு வெற்றி மேல் வெற்றி. இந்த ஆண்டும் விசிலடிக்கும் விரல்களுக்கு குறி வைத்திருக்கிறார்கள் ஹீரோக்கள்.

தொடர் தோல்வியில் துவண்டு கலங்கிப்போயிருந்த விஜய் இப்போதுதான் தெளிந்திருக்கிறார். அதிக ஆரவாரங்கள் இல்லை என்றாலும் காவலன் கொடுத்த சைலன்ட் சக்சஸ்தான் இதற்கு காரணம். பரபரப்பான ‘வேலாயுதம்’ படபிடிப்பு, ஷங்கரின் மெகா ஸ்டார் கூட்டணியில் ‘நண்பன்’ என விஜய் உற்சாகமாகி உள்ளார். அடுத்து சீமான் இயக்கத்தில் ‘கோபம்’ படத்தில் நடிக்கிறார் என்பது இப்போதைய தகவல்.

அடுத்தவர் அஜீத், சென்ற வருடம் அதிகம் எதிர்பார்த்த ‘அசல்’ ஏமாற்றிவிட்டது. கார் ரேசுக்கு போய்விட்ட அஜீத்தை அழைத்து வந்து மீண்டும் இப்போது ‘மங்காத்தா’ விளையாடுகிறார்கள். அதோடு இல்லாமல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘பில்லா பார்ட் – 2 ’ வில் கலக்க இருக்கிறார். படத்தின் கதையை முடித்து விட்டு அஜீத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவர்தன் படபிடிப்பிற்கான பக்கா பிளானுடன் இருக்கிறாராம்.

விக்ரம், சூர்யா இருவருக்குமே சென்ற ஆண்டு இந்தியில் அறிமுகம் கிடைத்தது. ‘ராவணன்’ படத்தில் விக்ரமும், ‘ரத்தசரித்திரம்’ படத்தில் சூர்யாவும் இந்திக்கு போனார்கள். விக்ரமுக்கு ராவணன் தோல்வி. அசராமல் உழைப்பவருக்கு இது என்ன பெரிய விஷயம்! இப்பொது ‘மதராசபட்டினம்’ இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் ‘தெய்வமகன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்தப் பிறகே அடுத்தப் படத்தின் பிளானில் இருக்கிறார் விக்ரம்.

சூர்யா தொடர் வெற்றி நாயகனாக ஜொலிக்கிறவர். சிங்கம் சக்கைப் போட்டு போட்டது. ரத்தசரித்திரம் தமிழில் சூர்யாவுக்கு நடிப்பில் நல்ல பெயர் கிடைத்தாலும் தெலுங்கில் படம் ஹிட். அது மட்டும் இல்லாமல் சூர்யாவை இந்தி சினிமாவிற்கு கொண்டு சென்றது. இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஆள் படு பிஸி. தொடர்ந்து ‘மாற்றான்’ படத்தில் ஐந்து வித்யாசமான கெட்டப்களில் வருகிறார் என்றும் தகவல்.

பெரிய வெற்றிகள் எதுவும் இல்லாமல் இருந்து வந்த தனுஷ் ஆடுகளம் வெற்றியால் அமர்க்களம் ஆகியுள்ளார். ஹரி இயக்கத்தில் வேங்கை , செல்வராகவன் இயக்கத்தில் இரண்டாம் உலகம், சிறப்புத் தோற்றத்தில் சீடன், விரைவில் மாப்பிளை ரிலீஸ் என தனுஷ் இந்த வருடம் ஜமாய்க்க இருக்கிறார்.

ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டிய சிம்பு சென்ற வருடம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். தொடர்ந்து வித்யாசமான கதை யமைப்பில் உருவாகும் ‘வானம்’ விரைவில் வெளிவருகிறது. தொடர்ந்து வேட்டை மன்னன், வாலிபன், போடா போடி என இந்த வருடம் வலம் வருகிறார்.

ஆர்யாவும் விஷாலும் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்கள். விஷாலுக்கு பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படம், தொடர்ந்து பட்டது யானை. ஆர்யா லிங்குசாமியின் இயக்கத்தில் அனுஷ்காவோடு வேட்டையில் கமர்ஷியலாக கலக்க இருக்கிறார்.

எதார்த்த படங்களின் நாயகனாகவே இருந்த ஜீவா கொஞ்சம் கமர்ஷியலில் கலர் கலராக கச்சேரி கட்டினார். வெளிவர இருக்கும் சிங்கம் – புலி படமும் அந்த வகையே. இப்போது கோ, நண்பன் என ஸ்டைலிஷான ஹீரோவாக மாற்றம் பெற்றிருக்கிறார். பேராண்மை படத்தின் மூலம் மிகப் பெரிய நம்பிக்கையை உருவாக்கிய ஹீரோ ஜெயம் ரவி. இப்போது அமீர் இயகத்தில் ஆதிபகவன் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த எங்கேயும் காதல் விரைவில் வருகிறது.

விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில்… நான் பேசியதில் எனக்கு பிடித்த பஞ்ச் டையலாக் ‘ வாழ்க்கை ஒரு வட்டம் டா! இதுல தோக்குறவன் ஜெய்ப்பான், ஜெய்க்கிறவன் தோப்பான்’ என்பது தான் என்று சொன்னார். இந்த வருடம் யாரு தோக்குறா? யாரு ஜெய்கிறா? அட பொறுங்கப்பா… தெரியத்தானே போகுது!

No comments:

Post a Comment