Wednesday, May 18, 2011

கொஞ்ச காலத்துக்குப் பின் அரசியல் பிரவேசம்! - விஜய் பேட்டி


கொஞ்ச காலத்துக்குப் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடுவது நடக்கலாம். ஆனால் இப்போது அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்றார் நடிகர் விஜய்.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இத்தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது.

தேர்தல் முடிவு குறித்து விஜய் அளித்த பேட்டி:

அ.தி.மு.க. வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால் இந்த அளவு மகத்தான வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் என்ன?

சமூகத்தின் பலதரப்பு மக்களும் மாற்றத்தை மாற்றத்தை விரும்பினர். நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. மக்கள் ஒட்டு மொத்தமாக அதை நிகழ்த்தி காட்டியுள்ளனர். நான் மட்டுமின்றி மாநில மக்கள் அனைவருமே ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உறுதுணையாக இருந்தார்கள்.

உங்கள் ரசிகர்களின் தேர்தல் பணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தேர்தலில் எங்களின் மக்கள் இயக்கமும் ரசிகர்களும் கடுமையாக உழைத்தார்கள். நான் வேண்டுகோள் விடுத்ததற்காக இரவு-பகலாக பணியாற்றினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.

முழு நேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

கொஞ்ச காலத்துக்கு பிறகு அது நடக்கலாம். ஆனால் தற்போது அதற்கான திட்டம் இல்லை. ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், என்றார் விஜய்.

தேர்தல் நேரத்தில், அதிமுக அணிக்கு ஆதரவு என வெளிப்படையாக எங்குமே அறிவிக்கவில்லை விஜய். அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே அதை சொல்லி வந்தார். பிரச்சாரத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment