Wednesday, March 23, 2011

விஜயின் பதிலடி அதி வேகம்

விஜயின் பதிலடி அதி வேகம்

சாரு அடித்த அதே பல்டிதான். இது வேலை வெட்டியற்ற ஒரு விஜய் ரசிகன், விஜயைப் பற்றி எழுதிய பதிவு. விஜயைப் பற்றி பெருமையாகத்தான் எழுதி இருப்பான். எனவே இந்த 5 நிமிடத்தை வீணாக்கிவிட்டேன் என்று பின்னூட்டம் இடும் கனவான்கள் உடனே மாற்று பெட்ரோல் கண்டுபிடிக்கும் பணிக்கே திரும்பிவிடுங்கள். கிம் கி டுக்கின் ரசனை வாரிசுகள், டொரண்ட் டவுன்லோடி பிட்டு பிட்டாக உலகப்படத்தை ரசிக்கும் அறிவு ஜீவிக்கள், அறிவு மணிரத்னங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல சத்தம் போடாமல் படித்துவிட்டு நாமதான் உலகிலே பெஸ்ட் என்ற நினைப்போடு எஸ் ஆகிவிடுங்கள். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அமைதியாக படிக்க முடியும் என்றால் தொடருங்கள். எதுக்குடா இந்த வேலை என்று பலமுறை நண்பர்கள் சொல்வதுண்டு. நினைத்ததை எழுத முடியாத பிளாக் என்ன வெங்காயத்துக்கு? சரி.பதிவுக்கு போலாம் வாங்க..
இந்தப் பதிவு எழுத காரணமாகிய செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். விஜயின் கடைசி 6 படங்கள் மாபெரும் தோல்வியாம். படமெடுத்தவர்கள், திரையிட்டவர்கள் என அனைவரும் நூடுல்ஸ் ஆகிவிட்டார்களாம். இனி விளம்பரப்படங்களில் நடித்துதான் அவர் காலத்தை ஓட்ட வேண்டுமாம்.நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னிடம் இதையெல்லாம் கேட்டவர்கள், சொன்னவர்கள் ஏராளம். அவர்களுக்கு இதோ என் பதில்
1) பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான காவலன், கேரளாவில் வழக்கமான விஜய் பட விலைக்கே விற்றிருக்கிறதாம்.
2) காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை இதுவரை விற்ற விஜய் பட விலையை விட அதிக விலைக்கு பெறப்பட்டிருக்கிறதாம்.
3) தமிழக வெளியீட்டு உரிமை சுறா பட விலைக்கே விற்கப்பட்டிருக்கிறது.
வெற்றிப் படங்கள் தரும் வரைதான் விஜய்க்கு மவுசு என்றவர்களுக்கு இன்னொரு செய்தி காத்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழக வாரப்பத்திரிக்கைகளின் அட்டையை அதிக முறை அலங்கரித்த நடிகர் யார் எனத் தெரியுமா? விஜய்.
என்ன கொடுமை சார் இது? வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் விஜய்க்கா? பூமி தாங்குமா? அதற்கு ஏதாவது ஆகி விடும் முன்பு இன்னொரு செய்தியையும் சொல்லி விடுகிறேன். பொதுவாக யார் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களைத்தான் விளம்பரம் செய்ய அணுகுவார்கள். சச்சினை விட தோனி அதிகம் சம்பாதிக்க இதுவே காரணம் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தொடர்ந்து 6 படங்கள் மகா ஃப்ளாப். குறுஞ்செய்திகளில் தமிழக சர்தார்ஜி அளவுக்கு நக்கல். இவ்வளவு பிரச்சினையில் இருக்கும் ஒரு மொக்கை நடிகரை தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக ஆக்க யாராவது நினைப்பார்களா? முன் வந்தது ஜோஸ் ஆலுக்காஸ். அதற்காக விஜய்க்கு தரப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? காதை மூடிக் கொள்ளுங்கள். ** கோடி. விஜய் பிராண்ட் அம்பாசடர் அல்ல. கிராண்ட் அம்பாசிடர் என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
என்ன சொல்லி என்னப்பா பிரயோஜனம்? படமெல்லாம் மொக்கையாத்தானே இருக்கு என்று சொல்கிறீர்களா? விஜயின் பயணத்தை சற்றே திரும்பி பாருங்கள். 1999ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதான் விஜய். என்றார்கள். அப்போதுதான் அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற இசை+ இயக்குனர் வேல்யூ மிக்க படங்களோடு வந்தது குஷி. அதன் பின் என்ன நடந்தது என சொல்லவும் வேண்டுமா?
.அதே போல் 2003ல் பகவதி, வசீகரா, புதிய கீதை என ஹாட்ரிக் தோல்விகள். விஜய்க்கு 5வது ரேங்காவது கொடுங்கப்பா என்று வள்ளல்கள் வியாக்கியானம் பேசின நேரம். ஒரு பக்கம் சூர்யா+விக்ரம்+பாலா என பெரும்படை. இன்னொரு பக்கம் வில்லன் என்ற ஹிட்டோடு தல கெத்தா நிற்கிறார். புத்தியே இல்லாமல் புதுமுக இயக்குனரை நம்பி திருமலை என்று வந்தார் விஜய். மொட்டை கன்ஃபார்ம்டு என்று ஆரூடம் சொன்னார்கள். அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்
“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”
விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.
“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”
சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம்.
இப்போது விஜய்க்கு அப்படியொரு இக்கட்டான நிலை. சொல்லப்போனால் இன்னும் மோசம். காவலன் என்று சொன்னதும் விஜய் திருந்தி விட்டார் என்றார்கள். அதே சூட்டில் வேலாயுதம் பூஜைப் போடப்படுகிறது. ”வேலா வேலா வேலா வேலாயுதம்.. நீ ஒத்த வார்த்தை சொன்னா போதும் நூறாயுதம்” என்று அறிமுகப்பாடல் எழுதுகிறார்கள். என்ன செய்யப்போகிறார் விஜய்? ஷங்கரோடு 3 இடியட்ஸ் என்கிறார்கள். இல்லை இல்லை. ஷங்கர் விஜய்க்காகவே புதுசா கதை எழுதுகிறார் என்றும் சொல்கிறார்கள். களவாணி இயக்குனர், விக்ரம்.கே.குமார் எல்லாம் ஸ்க்ரிப்ட்டோடு காத்திருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருகிறது. சீமான் வெளியே வந்ததும் பகலவன் என்கிறார்கள். பிடிக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மையான சினிமா ரசிகர்கள் பேசும் விஷயம் இன்று இதுதான். எல்லாமே செய்திகள்தானே? எதுதான் உண்மை?
இந்த வாரம் விகடனில் அமீரின் பேட்டி. பருத்தி வீரன் தந்த படைப்பாளி சொல்கிறார் “விஜய்க்குள்ளே அவார்டுகளை அள்ளிக் குவிக்கும் கலைஞனும் இருக்கிறார். அதற்கான உழைப்பும் இருக்கிறது. இனி எங்கேயோ போய்விடுவார் விஜய். கண்ணபிரான் ஒன்றாக செய்யப் போகிறோம்”. ஷங்கரின் படமும் உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை தோற்கும் போதெல்லாம் இன்னும் வேகமாக வெற்றிகளை குவிப்பது விஜயின் ஸ்டைல். இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்? இனிமேல் தான் இருக்கு ஆட்டம்.. இன்னுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வாய்பிளக்கும் கணக்கு புலிகள் உங்கள் வீட்டிலோ, அருகிலோ இருக்கும் குழந்தையை போய் கேளுங்கள். ஜோஸ் ஆலுக்காஸை போய் கேளுங்கள். இல்லை காவலன் வரும் வரை காத்திருந்து முதல் நாள் தியேட்டர் பக்கம் போய் பாருங்கள்.
2004களில் கில்லி என்று பைக்குகளின் பின்னாலும், ஆட்டோக்களின் பின்னாலும் எழுதிக் கொண்டு திரிந்தார்களே! அதை விட அதிகமானோர் விரைவில் கெத்தா சொல்வார்கள்

No comments:

Post a Comment