Tuesday, March 29, 2011

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்!!

Sattapadi Kutram movie audio launch news
நடிகர் விஜய் நடிகராகவே இருக்கட்டும்; அவருக்கு அரசியல் எல்லாம் வேண்டாம் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியார் கேட்டுக் கொண்டார். ஆளும்கட்சியின் அக்கிரமங்களை சொல்லியிருக்கிறேன் என்ற பப்ளிசிட்டியுடன் உருவாகியிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜெயலலிதா வருகிறார்... விஜயகாந்த் பேசுகிறார்... விஜய் பெறுகிறார்... என்றெல்லாம் வெளியான ஓவர் பில்ட்அப்-ஐ புஸ்ஸ்ஸ் ஆக்கிவிட்டு விழா நடந்தாலும் காரசாரமான பேச்சுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
மேடையேறிய பலரும் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். குறிப்பாக டைரக்டர் சீமான் பேசும்போது, விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது, என்று ஆவேசம் பொங்க குறிப்பிட்டார். கே.டி.குஞ்சுமோன், செல்வமணி உள்ளிட்டோரும் தன் பங்குக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை உசுப்பி விட்டார்.
ஆளாளுக்கு விஜய் அரசியலுக்கு வரணும் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வித்தியாசமான ஒரு குரல் ஒலித்தது. விஜய்யின் அரசியல் பிரவேச திட்டத்திற்கு எதிராக ஒலித்த அந்த குரல், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியாருடையது. தனது 18 ஆண்டுகால நண்பர் எஸ்.ஏ.சி.,க்கு அ‌ட்வைஸ் செய்யும் வகையில் அவர் பேசினார். ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும், என்று எதிர்ப்பை பதிவு செய்தார் சிதம்பரம். அவரது இந்த பேச்சு மேடையில் இருந்த சிலரையும், எதிரே இருந்த பலரையும் யோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் மகனை அரசியல் களமிறக்கி ஆதாயம் தேட நினைக்கும் எஸ்.ஏ.சி. முகத்தில் ஈயாடவில்லை.
நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி. பேசுகையில், சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார். ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.

No comments:

Post a Comment