Friday, August 19, 2011

எம்.ஜி.ஆர்., வழியில் விஜய்... யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது : எஸ்.ஏ.சி., பேட்டி

எம்.ஜி.ஆர்., கடந்து வந்த பாதையில், விஜய் சென்று கொண்டு இருக்கிறார். அவரை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து ஆலோசித்தார். பின்னர் விழாவுக்கான அனுமதி கோரியும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கவும் வலியுறுத்தி, போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சி., ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கி வருகிறார். கடந்த மாதம் கூட சேலத்தில் பெரிய விழா நடந்தது. அதேபோல், இந்தமாதம் 28ம் தேதி மதுரையில் தெண்டரணி தலைவர் மகேஸ்வரன் முயற்சியில், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த விழாவிற்கான இடத்தேர்வு முடிந்து, புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் விழா நடக்க உள்ளது. நடிகர் விஜய் 92-ல் நடிக்க வந்தார். அப்போது ரசிகர் மன்றமாக ஆரம்பித்து, நற்பணி இயக்கமாக உருவாகி, தற்போது மக்கள் இயக்கமாக மாறி ஒரு சமூக இயக்கமாக செயல்படுகிறது. இந்த இயக்கம் ஏழை மக்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.

விஜய்க்கு நடிகர் எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும். நடிகனாக வாழ்க்கையை தொடங்கி, முதல்வராகி இன்றும் அவரை வாழ்க்கை முடியாமல் உள்ளது. அவர் மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். எனவே அவரை ஒரு ரோல் மாடலாக வைத்து தான் இது போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார். விஜய்யின் கடைக்கோடி ரசிகன் படம் பார்க்க கொடுக்கும் பணம், வினியோகஸ்தரிடம் சென்று, அவரிடமிருந்து தயாரிப்பாளரிடம் வந்து, அங்கிருந்து அந்த படத்தில் விஜய் நடிப்பதற்கு சம்பளமாக வருகிறது. ஏழை மக்களிடம் இருந்து வரும் பணத்தில் 10 சதவீதத்தை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதன்படி தான் இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். வேலாயுதம்

விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற திட்டம் உள்ளதா என்று நீங்கள் கேட்டீர்கள். அரசியல் கட்சியாக மாறினால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா? மக்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத் தான் சமூக உணர்வோடு மக்களுக்கு நலத்திட்ட உதவியாக செய்து வருகிறோம். தற்போது ஆட்சி மாற்றத்தால், சினிமா துறைக்கு விடுதலை கிடைத்துள்ளது. நான் போராட்ட குணம் கொண்டவன். அதே போன்று எனது மகனும் உள்ளான். இந்த சந்திரசேகரரை யாரும் விலை கொடுத்து வாங்கி விட முடியாது. அதே போன்று நான் பெற்று எடுத்த விஜய்யையும் வாங்கி விட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment