Sunday, April 10, 2011

சன் நிதியுதவியுடன் பொன்னியின் செல்வன் எடுக்கிறார் மணிரத்னம்?

Mani Rathnam
படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், இப்போது தமிழ் இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் உள்ளார். 

அவரது இந்தத் திட்டத்துக்கு சன் டிவி நிதி உதவி அளிக்கும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. படத்துக்கு ரூ 200 கோடி பட்ஜெட் என்றும், இதன் ஒரு பகுதியை முழுமையான சன் பிக்சர்ஸ் வழங்கும் என்றும் கூறுகிறார்கள்.

மிகப்பெரிய, கற்றோரும் வியக்கும் அற்புதமான நாவல் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன். இதற்கு நிகரான இன்னொரு தமிழ் சரித்திர நாவல் இதுவரை எழுதப்பட்டதில்லை என்று புகழப்படும் அளவு பிரமாண்டமானது அதன் விஸ்தாரம். கல்கியின் நடையும், சரித்திர நாயகர்களான வந்தியத் தேவன், ராஜ ராஜசோழன், குந்தவை போன்றவர்களை மையப்படுத்தி அவர் கதை புனைந்திருந்த விதமும் படிப்பவரை வேறு உலகத்துக்கு இட்டுச் செல்லும் வன்மைமிக்கது.

இந்த நாவலை படமாக்க அமரர் எம்ஜிஆர் முயன்றார். இயக்குநர் மகேந்திரன் இதற்கான திரைக்கதையை எழுதினார். ஆனால் படமாக்கவில்லை. 

பின்னர் கமல்ஹாஸன் இந்தக் கதையை படமாக்கப் போவதாகக் கூறினார். ஆனால் நடக்கவில்லை. இதற்கிடையே ரஜினி - கமலை வைத்து இந்தக் கதையை சன் டிவி படமாக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அதிலும் உண்மையில்லை என்றானது.

இப்போது, பொன்னியின் செல்வனை படமாக்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப்படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார். நடிகர் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதி உதவி செய்யும் என்று செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க சன் பிக்சர்ஸ் மறுத்துவிட்டது. மணிரத்னம் தரப்பிலும் மவுனம் சாதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment