Tuesday, April 5, 2011

விரைவில் விஜய்-பேரரசு மீண்டும் கூட்டணி




Perarasu


திரைத் துறையினருக்காக ஏராளமான சலுகைகளை அளித்து வரும் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது திரைத் துறையினரின் கடமையல்லவா?. அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு யாரும் கூப்பிடாமலேயே ஒருவர் போக வேண்டும் என்பது எனது எண்ணம் என்று கூறியுள்ளார் இயக்குநர் பேரரசு.

பன்ச் டயலாக்குகளை பெருமளவில் நம்பி படங்களை எடுக்கும் இயக்குநர் பேரரசு. இவரது இயக்கத்தில் அஜீத், விஜய், பரத் ஆகியோர் பட்டையைக் கிளப்பியுள்ளனர்.

இந் நிலையில், பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார் பேரரசு. அங்கு செய்தியாளர்கள் அவரிடம், கலையுலக மோதல் குறித்து கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த பேரரசு, தமிழக அரசு சினிமாத்துறைக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. இப்படி உதவிகள் செய்து வரும் முதல் அமைச்சர் கலைஞருக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது அனைத்து கலைஞர்களின் கடமை.

இப்படி நன்றி தெரிவிப்பது அல்லது பாராட்டு தெரிவிப்பது என்றால் கலைநிகழ்ச்சிகள் மூலமாகத்தான் செய்ய முடியும். எனவே இந்த நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமலேயே ஒரு கலைஞன் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.

அதேசமயம், தமிழ் சினிமாவில் வேறு மொழியை சேர்ந்த ஏராளமான தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளனர். அதுபோல் இந்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த பல இயக்குனர்கள், கேமராமேன்கள் புகழ்பெற்று விளங்குகிறார்கள்.

தெலுங்கு, கன்னடத்திலும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே கலைத்துறையில் இருப்பவர்களை மொழி ரீதியாக பிரிப்பது என்பதும், வேறுபடுத்தி பார்ப்பது என்பதும் ஆரோக்கியமானது அல்ல என்றார்.

உங்களது அடுத்த படமான திருத்தணி எவ்வளவு தூரம் வந்துள்ளது என்ற கேள்விக்கு, திருத்தணி திரைப்படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்களுடன், இசையையும் நானே அமைத்து இருக்கிறேன்.

விரைவில் வேறு புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தும் வகையில் சொந்தப்படங்கள் எடுக்க முடிவு செய்து இருக்கிறேன். நான் தயாரிக்கும் படங்கள் முழுக்க முழுக்க அந்தந்த இயக்குனர்களின் வெளிப்பாடாக இருக்கும்.

அதுபோல் நல்ல நாவல்களை திரைப்படமாக்கும் எண்ணமும் உள்ளது. எனக்கென்று ஒரு வணிக முத்திரை இருப்பதால் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே கலைப்படங்கள் பக்கம் என்னை திருப்ப முடியும் என்பதால் அதிரடியாக கலைப்படங்கள் உருவாக்கும் எண்ணம் தற்போது இல்லை என்றார் பேரரசு.

விஜய்யை வைத்து 2 'பட்டாசு' படங்களைக் கொடுத்த பேரரசு மீண்டும் அவருடன் விரைவில் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment